சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவுகிறது..

corona spread in south districts in Tamilnadu.

by எஸ். எம். கணபதி, Jun 21, 2020, 10:01 AM IST

சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களின் மூலம் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இவற்றில் தற்போது கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது.தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டிலிருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. ஆனால், மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவே அது கட்டுப்பட்டது. அதன்பிறகு, கோயம்பேடு மார்க்கெட் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவியது.


தற்போது அதிகபட்சமாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றிக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்20) ஒரே நாளில் 2396 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 66 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 56,845 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1045 பேரையும் சேர்த்து 31,316 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று 1254 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று 180 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3620 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 131 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2414 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 87 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1095 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

இது வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில்தான் பெரும்பாலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டி விட்டது. தினமும் 10, 20 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாலும், முதல்வர் அலுவலக தனிச் செயலர், திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர், செவிலியர் போன்றவர்களும் உயிரிழந்ததாலும் மக்கள் அதிகமான பீதியில் உள்ளனர். இதனால், தங்கள் சொந்த ஊர்களுக்கு கார்களில் படையெடுத்து சென்றனர்.

அப்படிச் சென்றவர்களிடம் இ-பாஸ் உள்ளதா என்று மட்டுமே சோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. இதனால், கொரோனா பாதித்தவர்களும் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்றதில் கொரோனா அந்த மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசிடம் தெளிவான திட்டமும் இல்லை.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 38 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது.

You'r reading சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா பரவுகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை