இந்தியா, சீனா எல்லைகளில் இருநாட்டு ராணுவமும் குவிக்கப்பட்டு வருவதால், எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா பரவிக் கொண்டிருக்கும் தருணத்தில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே திடீரென சீனா தனது படைகளைக் குவித்தது. மேலும், கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன.
இதையடுத்து, இருதரப்பு வீரர்களும் ஆயுதமின்றி கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால் மோதிக் கொண்டனர். மேலும், காஷ்மீர் லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாகத் தகவல் வெளியானது. ஆனால், அது உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில், இந்தியா, சீனாவின் 3488 கி.மீ. எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ஆங்காங்கே இருநாடுகளும் தங்கள் ராணுவத்தைக் குவித்துள்ளன. இதனால், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. மேலும், இரு நாட்டு விமானப் படைகளும் எல்லைப் பகுதிகளில் முகாமிட்டுத் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. இதனால், மீண்டும் மோதல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.சீனப் படைகள் தாக்குதலைத் தொடங்கினால், முழு வீச்சில் பதிலடி கொடுக்க ராணுவத்துக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.