சென்னையில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தைத் தாண்டியது..

corona cases crossed 40,000 in chennai.

by எஸ். எம். கணபதி, Jun 22, 2020, 09:54 AM IST

சென்னையில் மட்டும் கொரோனா நோய் பாதித்தவர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் ஆரம்பத்தில் டெல்லி மாநாட்டில் இருந்து வந்தவர்களின் மூலம் கொரோனா பரவியது. ஆனால், மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யவே அது கட்டுப்பட்டது. அதன்பிறகு, கோயம்பேடு மார்க்கெட் மூலம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவியது.


இதைத் தொடர்ந்து அதிகபட்சமாகச் சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வந்தது. அடுத்து, சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகமாகப் பரவியது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் சென்னையில் இருந்து சென்றவர்கள் மூலமாக கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்21) ஒரே நாளில் 2532 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 52 பேரும் அடக்கம். மலேசியா 3, யுஏஇ 1, மகாராஷ்டிரா 10, கேரளா 16, கர்நாடகா 12, டெல்லி மற்றும் ராஜஸ்தான் தலா 3, தெலங்கானா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 59,377 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1432 பேரையும் சேர்த்து 32,754 பேர் குணம் அடைந்துள்ளனர்.சென்னையில் மட்டும் நேற்று 1493 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 41,172 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் நேற்று 121 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 3745 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 120 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 2534 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 64 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1159 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

இது வரை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் பெரும்பாலும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டி விட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், மக்கள் அதிகமான பீதியில் உள்ளனர். இதனால், தங்கள் சொந்த ஊர்களுக்கு கார்களில் படையெடுத்துச் சென்றனர்.

கொரோனா பாதித்தவர்களும் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்றதில் கொரோனா அந்த மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் நேற்று கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை.இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 53 பேர் பலியாயினர். இதையும் சேர்த்தால், சாவு எண்ணிக்கை 757 ஆக உயர்ந்தது.

You'r reading சென்னையில் கொரோனா பாதிப்பு 41 ஆயிரத்தைத் தாண்டியது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை