இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து 55 அதிகாரிகளைத் திருப்பி அழைத்துக் கொள்ள அந்நாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அபித் உசேன், முகமது தாகிர் ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக உளவு வேலைகளில் ஈடுபட்டனர். இது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ததும் தங்களை இந்தியர்கள் என்று கூறி, ஆதார் அட்டைகளையும் காட்டினார்கள். ஆனால், அந்த அட்டைகள் போலியானவை என்று தெரிய வந்தது. விசாரணையில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்காக அவர்கள் இந்தியாவில் உளவு பார்த்ததாக ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு, பாகிஸ்தான் தூதரகம் வேண்டுகோளின் படி இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றி வந்த 2 பேரை அந்நாட்டு போலீசார் கடத்திச் சென்று துன்புறுத்தினர். இந்தியாவின் பலத்த எதிர்ப்புக்குப் பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தானுடன் தூதரகத் தொடர்புகளைக் குறைத்துக் கொள்ள இந்தியா முடிவு செய்திருக்கிறது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றுவோரில் 55 பேரை ஒரு வாரத்திற்குள் திருப்பி அழைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
மேலும், இதே போல் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து 55 பேரைத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு அந்நாட்டுக்கு இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தூதரக அதிகாரி சையத் ஹைதர்ஷாவை அழைத்து, இதைத் தெரிவித்துள்ளனர். இருதரப்பிலும் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவோரை 50 சதவீதம் வரை குறைத்துக் கொள்ள உள்ளனர். இதனால், இருநாட்டுத் தூதரகத் தொடர்புகள் குறைக்கப்படுகிறது.