இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 15 ஆயிரத்தைத் தாண்டியது.சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.அதிகபட்சமாக முதல் இடத்தில் அமெரிக்கா, 2வது இடத்தில் பிரேசில், 3வது இடத்தில் ரஷ்யா, 4வது இடத்தில் இந்தியாவிலும் நோய்ப் பாதிப்பு உள்ளது.
இந்தியாவில் 90 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும், கொரோனா தொற்று பரவல் கட்டுப்படவில்லை. நாடு முழுவதும் தினமும் சராசரியாக 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.நாட்டில் நேற்று ஒரே நாளில் புதிதாக 18,552 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது. மொத்தம் 5 லட்சத்து 8953 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 15,685 பேர் பலியாகி விட்டனர். நேற்று மட்டுமே 384 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 52,765 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 2வது இடத்தில் டெல்லியில் 77,240 பேருக்கும், தமிழகத்தில் 74,622 பேருக்கும் கொரோனா பாதித்திருக்கிறது. இந்தியாவில் நேற்று 2 லட்சத்து 20,479 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது வரை 79 லட்சத்து 96,707 மாதிரிகள், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குணம் அடைந்தோர் விகிதமும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.