ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்ததால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்குக் கடந்த 15 நாட்களுக்கு மேலாகச் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று (ஜூன்26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்குப் பத்திரிகையாளர் சங்கங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளன.சென்னையில் பல டி.வி. சேனல்களிலும் நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினர் பலருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பணிக்குத் திரும்பி வருகின்றனர். பலரும் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும், ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், கொரோனாவுக்கு தமிழகத்தில் முதன்முதலாக ஒரு ஊடகவியலாளர் பலியாகியிருப்பது அனைத்து தரப்பினரையும் கவலையடையச் செய்துள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ராஜ் டிவி மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன், கொரோனாவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.