சமூகப் பரவலே இல்லையா? முதல்வர் கருத்தை மறுக்கும் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்..

Why c.m. denying prevalance of covid community transmission, asks Medical Experts.

by எஸ். எம். கணபதி, Jun 27, 2020, 14:19 PM IST

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று முதல்வர் தொடர்ந்து கூறி, வருவதை மருத்துவ நிபுணர்கள் மறுக்கின்றனர். தமிழ்நாட்டில் இது வரை 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் 47 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் பலரும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறி விட்டது என்று கூறி வருகின்றனர்.


இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின்(ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சிக் குழுவில் இடம் பெற்றிருந்த நிபுணர்கள் டாக்டர் சசிகாந்த், டாக்டர் டி.ஜி.எஸ். ரெட்டி ஆகியோர் கூட, இந்தியாவில் கொரோனா சமூகப் பரவலாக மாறி விட்டது என்று அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். ஆனாலும் ஐ.சி.எம்.ஆர். தொடர்ந்து இதை மறுக்கிறது.
அதே போல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து, சமூகப் பரவல் என்ற வார்த்தையைக் கூட கெட்ட வார்த்தை போல் மறுத்து வருகிறார். திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தமிழ்நாட்டில் கொரோனா சமூகப் பரவல் என்பதே கிடையாது. ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றால், அவரிடம் இருந்து யாருக்கு பரவியிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சமூகப் பரவல் என்றால் ஊடகங்களைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும் இங்கு இருக்க முடியுமா? சமூகப் பரவல் என்றால் எல்லோருக்கும் பரவியிருக்க வேண்டும் என்று புது விளக்கம் கொடுத்தார்.

அதே சமயம், தொற்று நோய் சிகிச்சை நிபுணர் ஜேக்கப் ஜான் கூறுகையில், ஐ.சி.எம்.ஆர், மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவை எதற்காக சமூகப் பரவல் என்பதை மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. மார்ச் மாத இறுதியிலிருந்தே தொற்று பரவி வருகிறது. அரசு இப்படி மறுப்பதன் மூலம் அது, பொது நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகும். இப்படி மறுப்பதன் மூலம், கொரோனா தொற்று பாதித்த அனைவருமே மருத்துவமனைகளிலோ, வேறு மையங்களிலோ தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர் என்று மக்கள் நம்பி, மிகவும் அலட்சியமாக இருக்க வழி ஏற்படுகிறது. இது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும். ஏனெனில், மக்களை எச்சரிக்காவிட்டால், இன்னும் அதிகமானோருக்குப் பரவி விடும் என்று கூறியிருக்கிறார்.

ஒருவருக்கு யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பது தெரியாவிட்டால், அதுதான் சமூகப் பரவல் என்பதாகும். இப்போது பலரும் தங்களுக்கு எப்படிப் பரவியது எனத் தெரியவில்லை என்றுதான் சோதனைக்கு வரும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் தெரிவிக்கின்றனர். இதனால், அறிக்கை அனுப்பும் சுகாதார ஆய்வாளர்கள், யாரிடம் இருந்து பரவியது என்ற இடத்தில், கோயம்பேடு மார்க்கெட் சோர்ஸ் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றனர். இதை அரசு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

You'r reading சமூகப் பரவலே இல்லையா? முதல்வர் கருத்தை மறுக்கும் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை