கராச்சியில் பங்குச் சந்தையில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், அங்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும். தீவிரவாதிகள் மனித வெடிகுண்டுகளாக வந்து தாக்குதல்களை நடத்துவார்கள். சில ஆண்டுகளாகத் தீவிரவாதச் சம்பவங்கள் குறைந்தாலும் அவ்வப்போது குண்டுவெடிப்புகள் நடக்கின்றன.
இந்நிலையில், முக்கிய வர்த்தக நகரான கராச்சியில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள பங்குச்சந்தையில் இன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நான்கு தீவிரவாதிகள், கொரோலா காரில் வந்தனர். பங்குச் சந்தை கட்டிட வாயிலில் தடுப்புக் கட்டைகளை மீறி அவர்களின் கார் படுவேகமாக உள்ளே நுழைந்தது.காரில் இருந்து இறங்கிய தீவிரவாதிகள், பாதுகாவலர்கள் மீது கையெறி குண்டுகளை வீசி விட்டு உள்ளே நுழைந்தனர். பின்னர், அவர்கள் நவீன ஆட்மோமேடிக் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். எனினும், பங்குச் சந்தைக் கட்டிடத்தைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்து, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் தாக்குதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, பாதுகாப்புப் படை வீரர்கள் 4 பேரும், ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.