நாட்டின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நவீன பைக் ஓட்டும் படம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது. இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர். டெல்லியில் இருந்து அவர் கடந்த வார இறுதியில் நாக்பூருக்குச் சென்றுள்ளார். அங்கு அதிக சக்தி கொண்ட ஹார்லே டேவிட்சன் என்ற நவீன மோட்டார் பைக்கை தலைமை நீதிபதி போப்டே ஓட்டிப் பார்த்துள்ளார். அவருக்கு ரேஸ் பைக்குகள் ஓட்டுவதில் விருப்பம் அதிகம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதி போப்டே, பைக் ஓட்டுவது போன்ற போட்டோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருக்கிறது. அதில் தலைமை நீதிபதி பாராட்டியும், கடுமையாக விமர்சித்தும் ஏராளமான கமென்ட்ஸ் போடப்பட்டு வருகின்றன.
அதில் ஒருவர், அந்த மோட்டார் பைக் நாக்பூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சோன்பா முசாலே என்பவரின் மகன் ரோகித் சோன்பாஜி முசாலே என்பவருடைய பைக் என்று குறிப்பிட்டு, தலைமை நீதிபதியை விமர்சித்துள்ளார். அதே போல், இன்னொருவர் அந்த பைக்கின் பதிவெண்ணைப் போட்டு இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். தலைமை நீதிபதி, முகக்கவசமோ, ஹெல்மெட்டோ அணியவில்லை, காரணம் அவர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என்றும் கமென்ட்ஸ் போடப்பட்டிருக்கின்றன.