டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்யும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, லக்னோவில் குடியேற முடிவு செய்திருக்கிறார். அவர் வசித்த டெல்லி பங்களா தற்போது பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்திற்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு தனித்தனியாகக் கருப்பு பூனை படை என்றழைக்கப்படும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு அரசு பங்களா ஒதுக்கப்படும். அதனடிப்படையில், கடந்த 1997ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி லோதி எஸ்டேட் சாலையில் 35ம் நம்பர் பங்களா, பிரியங்கா காந்திக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதத்தில் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அளிக்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றது. அதற்குப் பதிலாக அவர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு பங்களாவை ஒரு மாதத்திற்குள் காலி செய்யுமாறு பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, பிரியங்கா காந்தி வாடகைப் பாக்கித் தொகை 3 லட்சத்து 46,677 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினார். மேலும், இம்மாத இறுதியில் வீட்டை காலி செய்வதாகக் கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி வசித்த பங்களாவுக்குக் கடைசியாக மாதம் ரூ.35 ஆயிரம் வாடகை செலுத்தி வந்தார். ஆரம்பத்தில் அதற்கு ரூ.53 ஆயிரம் வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தன்னால் அவ்வளவு வாடகை தர இயலவில்லை என்று கூறி, அதைக் குறைக்குமாறு மத்திய அரசிடம் கோரியிருந்தார். கடந்த 2003ல் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு அதை ஏற்றுக் கொண்டு, ரூ.8800 என்ற அளவுக்குக் குறைத்தது. அதன்பிறகு, வருடந்தோறும் வாடகை உயர்த்தப்பட்டு, கடைசியாக ரூ.35 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த பங்களா, பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் அனில் பலூனிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி.யாக உள்ள அவர் மருத்துவக் காரணங்களைக் கூறி, தனி பங்களா ஒதுக்குமாறு அரசிடம் கேட்டிருந்தார். அதனால், அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் பங்களாவை காலி செய்யும் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் குடியேறவிருக்கிறார். ஏற்கனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அவர் மாதந்தோறும் அம்மாநிலத்திற்குச் சென்று கொண்டிருந்தார். இப்போது லக்னோவில் நிரந்தரமாகக் குடியேற முடிவு செய்திருக்கிறார். லக்னோவில் கோகலே மார்க் பகுதியில் இந்திராகாந்தியின் அத்தை ஷீலா கவுலுக்குச் சொந்தமான பங்களா, காலியாக உள்ளது. அந்த பங்களாவைப் பிரியங்கா காந்தி குடும்பத்திற்காகத் தயார் செய்யும் பணி தொடங்கியிருக்கிறது. சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளதால், அவர்கள் வசிக்கும் அரசு பங்களாக்களை காலி செய்யச் சொல்லப்படவில்லை.