Monday, Jun 21, 2021

கை கட்டி, வாய் பொத்தி நிற்கும் அதிமுக அரசு.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை..

M.K.Stalin slams Admk govt. on Farmers issue.

by எஸ். எம். கணபதி Jul 6, 2020, 14:28 PM IST

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஊழல் செய்வதை முன்னுரிமை வேலையாகக் கொண்டு, ஜனநாயகத்திற்குப் புறம்பாகத் தன்னிச்சையாகச் செயல்படும் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடும் தீர்மானமான எண்ணத்துடன், கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. முதலமைச்சரின் மாவட்டமான சேலத்தில் மட்டும் 1247 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டு- அங்கு 5 பேர் உயிரிழந்தும் உள்ளார்கள். கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளில் தன் சொந்த மாவட்டத்திலேயே முனைப்புக் காட்டாமல், பாரத் பெட்ரோலியத்தின் இருகூர் - தேவனகொந்தி- ஐ.டி.பி.எல். (IDPL) திட்டங்களுக்கு விளை நிலங்களைக் கைப்பற்றச் சேலத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது,விவசாயிகளின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கொடுந்துயரமாகும்.ஏற்கனவே எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு மாவட்டத்தில் உள்ள பசுமை நிறைந்த பகுதிகளை வெட்டி ஒழித்து- காவல் துறையை வைத்து விவசாயிகள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட முதலமைச்சர், இப்போது இந்த எண்ணெய்க் குழாய் பதிக்கும் திட்டத்திற்காக நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நிலங்களை எடுக்கக் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்துவது மனித நேயமற்றது.

அ.தி.மு.க. அரசுக்கு மனித உயிர்களோ, விவசாயிகளின் வாழ்வாதாரமோ முக்கியமல்ல; மத்திய அரசு கை காட்டும் இடத்தில், கைக்கட்டி வாய் பொத்தி நின்று, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேளாண் நிலங்களைப் பறித்துக் கொடுப்பது மட்டுமே முக்கியம் என்ற நோக்கில் பழனிசாமி செயல்படுவது வேதனைக்குரியது.விவசாயிகளுக்கு இடி மேல் பேரிடி போல் – கடன் தவணையைக் கேட்டு மிரட்டும் செயலும் அ.தி. மு.க. ஆட்சியில் தொடருகிறது. வங்கிக் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்திட வேண்டும் என்று ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிகளால் மிரட்டப்பட்டதால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மானுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜாமணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

“கொரோனா காலத்தில் வங்கிக் கடன் தவணைகளைச் செலுத்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மக்களிடமும்- உச்சநீதிமன்றத்திலும் மாறி மாறி அறிவித்து வருகின்றன. ஆனால் ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மீறி வங்கித் தவணையைச் செலுத்த வேண்டும் என்று விவசாயிகளை வங்கிகள் தான்தோன்றித்தனமாக மிரட்டுகின்றன.அறிவிப்பு ஒன்றும் அணுகுமுறை வேறுமாக அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டுத் திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு விளைநிலங்களைக் கைப்பற்றச் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், ரிசரவ் வங்கியின் அறிவிப்பிற்கு எதிராக வங்கிக் கடன்களின் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த மிரட்டி - விவசாயி ராஜாமணியின் தற்கொலைக்குக் காரணமான வங்கி அதிகாரிகள் மற்றும் அதன் கடன் வசூல் முகவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களைக் கைது செய்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ரிசர்வ் வங்கியின் கால அவகாசம் அளிக்கும் உத்தரவினை மீறிக் கடன் தவணையை வசூலிக்கும் வங்கிகளின் லைசென்சை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

You'r reading கை கட்டி, வாய் பொத்தி நிற்கும் அதிமுக அரசு.. ஸ்டாலின் காட்டமான அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை