கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். பெரிய நடிகராக வருவார் என்று பலராலும் கணிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஒரு சில படங்களில் நடித்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ம் தேதி தூக்குப் போட்டுக்கொண்டு இறந்தார். இது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுஷாந்த் மரணம் தொடர்பாக பாந்த்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை 29க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருக்கிறது.
பிரபல படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி அவர் இன்று பாந்த்ரா போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்கு மூலம் பதிவு செய்தார். பன்சாலியுடன் அவரது வழக்கறிஞரும் சில பணியாளர்களும் வந்தனர்.
சுஷாந்த்தை பன்சாலி ஒரு படத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால் பெரிய நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தத்தில் சுஷாந்த் இருந்ததாக தெரிகிறது. இதனால் பன்சாலியின் பட வாய்ப்பை ஏற்க முடியவில்லை. குறிப்பிட்ட படம் பின்னர் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இது சுஷாந்துக்கு பெரிய மன உளைச்சலைத் தந்ததாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் தற்கொலை எண்ணத்துக்கு வரக் காரணம் என்ன என்ற அடிப்படையில் தற்போது போலீசார் விசாரிக்கின்றனர். அவருடன் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக நெருக்கமான தொடர்பில் இருந்த அனைவரையுமே போலீசார் அழைத்து விசாரித்து வருகின்றனர்.சுஷாந்த் இறந்த பிறகு அது தொடர்பாக பத்திரிகையில் கட்டுரை எழுதிய நிருபர் ஒருவரையும் போலீசார் விசாரித்திருக்கின்றார். கட்டுரை எழுதுவதற்குத் தகவல்கள் யாரிடமிருந்து பெறப்பட்டது என்று அவரிடம் கேட்கப்பட்டது.