ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக ரூ.25 கோடி பேரம்..

Bjp offering Rs25 crore to topple my govt. says Ashok Gehlot.

by எஸ். எம். கணபதி, Jul 11, 2020, 15:09 PM IST

எனது ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.25 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார். சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். அதனால், அசோக் கெலாட்டை கட்சிப் பொறுப்புக்கு அழைத்துக் கொள்ளத் தலைமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு ராகுல்காந்தி ராஜினாமா செய்து விட்டதால் கட்சித் தலைமையே உறுதியில்லாமல் போனது. அதனால், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பெரிய முடிவுகள் எடுப்பதில்லை.


இந்நிலையில், கர்நாடகாவைப் போல் ராஜஸ்தானிலும் ஆளும் காங்கிரசில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் விலகி வருவார்கள் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான குலாப்சந்த் கட்டாரியா தெரிவித்திருந்தார். மேலும், ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியையும் பாஜக மேற்கொண்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை.தற்போது மீண்டும் அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 200. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 72 எம்எல்ஏக்களும் உள்ளனர். சுயேச்சைகள் 13, பகுஜன்சமாஜ், மார்க்சிஸ்ட் தலா 2 எம்.எல்.க்கள் உள்ளனர். மெஜாரிட்டிக்கு 101 எம்எல்ஏக்கள் தேவை என்பதால், காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளில் 20 பேர் வரை இழுத்தால்தான் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்.

இந்த சூழலில், முதல்வர் அசோக் கெலாட் இன்று(ஜூலை11) அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:எனது அரசைக் கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அட்வான்சாக ரூ.10 கோடியும், ஆட்சியைக் கவிழ்த்த பின்பு ரூ.15 கோடியும் தருவதாகப் பேரம் பேசுகிறார்கள். பாஜக மேலிடத்தின் ஆசியுடன் சதீஷ்புனியாவும், ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும் எப்படியாவது எனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்து வருகிறார்கள்.காங்கிரசைப் பொறுத்தவரை ஆறேழு பேர் முதல்வர் பதவி வகிக்கத் தகுதி படைத்தவர்களாக உள்ளனர். ஆனால், ஒருவர்தான் முதல்வராக இருக்க முடியும். அதனால் மற்றவர்கள் விட்டுக் கொடுத்துச் செல்கிறார்கள்.இவ்வாறு அசோக் கெலாட் கூறியிருக்கிறார். கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஆட்சியைக் கவிழ்த்து பாஜக ஆட்சியைக் கொண்டு வருவதில் மோடி-அமித்ஷா டீம் இன்னமும் உறுதியாக இருப்பது கெலாட்டின் பேட்டியைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

You'r reading ராஜஸ்தான் ஆட்சியைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக ரூ.25 கோடி பேரம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை