தினகரன் நாளிதழ் சென்னைப் பதிப்பின் மூத்த செய்தி ஆசிரியர் பாலகுமார் திடீர் மரணம் அடைந்தார்.தினமலர் நாளிதழ் மதுரைப் பதிப்பில் பணியைத் தொடங்கி. கடந்த 23 ஆண்டுகளாகப் பத்திரிகையாளராக பணியாற்றியவர் ஜே.எஸ்.கே.பாலகுமார்(49). தினமலர் சென்னை பதிப்பு, காலைக்கதிர் பத்திரிகைகளில் பணியாற்றிய பாலகுமார், கடைசியாகத் தினகரன் நாளிதழ் சென்னை பதிப்பில் மூத்த செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
மதுரையைச் சேர்ந்த பாலகுமாருக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்தம் கட்டியதாகக் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்பு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு, ஓரளவு குணமடைந்து வந்தார்.இந்நிலையில், இன்று(ஜூலை11) அதிகாலையில் பாலகுமாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் பத்திரிகையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதி தமிழன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அனைவருடனும் அன்புடன் பழகக்கூடிய JSK பாலகுமார் கடந்த ஒரு வாரக் காலமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுமார் 23 ஆண்டுகளாகத் தினமலர், காலைக்கதிர், தினகரன் நாளிதழ்களில் பணியாற்றிய JSK பாலகுமார் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவு நம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவரது மறைவுக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்திருக்கிறார். பல்வேறு ஊடகவியல் துறை சங்கங்களும், பாலகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.