இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 8 லட்சத்தில் இருந்து மூன்றே நாட்களில் 9 லட்சமாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் தற்போது தான் அதிகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் கடந்த 11ம் தேதியன்று 8 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்தது. இப்போது, மூன்றே நாட்களில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 9 லட்சமாக அதிகரித்திருக்கிறது.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 28,498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, நோய் பாதித்தவர் எண்ணிக்கை 9 லட்சத்து 6752 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 71,460 பேர் குணம் அடைந்துள்ளனர். 3 லட்சத்து 11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பலியான 553 பேரையும் சேர்த்தால், இது வரை 23,727 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 2 லட்சத்து 60,924 பேருக்கும், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 42,798 பேருக்கும், டெல்லியில் ஒரு லட்சத்து 13,740 பேருக்கும் தொற்று பரவியிருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கி 109 நாட்களில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை மே19ல் ஒரு லட்சமானது. அடுத்த 15 நாளில் ஜுன்3ல் 2 லட்சமாகவும், அடுத்த 10 நாளில் ஜுன்13ல் 3 லட்சமாகவும், அடுத்த 8 நாளில் ஜுன் 21ல் 4 லட்சமாகவும், அடுத்த 6 நாளில் ஜுன் 27ல் 5 லட்சமாகவும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை உயர்ந்தது. இதைத் தொடர்ந்து 6 நாளில் ஜூலை 2ல் 6 லட்சமாகவும், 5 நாளில் ஜூலை 7ல் 7 லட்சமாகவும், அடுத்த 4 நாளில் ஜூலை 11ல் 8 லட்சமாகவும், அடுத்த 3 நாளில் இன்று(ஜூலை 14) நோய்ப் பாதிப்பு 9 லட்சமாக அதிகரித்திருக்கிறது.