ராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்..

Rajasthan Congress Legislative Party (CLP) meeting at in Jaipur.

by எஸ். எம். கணபதி, Jul 14, 2020, 13:10 PM IST

கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தைப் போல், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை எளிதாகக் கவிழ்த்து விடலாம் என முயன்ற பாஜக தற்போது அந்த முயற்சியில் திணறி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்து அசோக் கெலாட் அரசு பாதுகாத்து வருகிறது.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார். வயது முதிர்ந்த அசோக் கெட்டை ஒதுக்கி விட்டு தன்னை முதல்வராக்க வேண்டுமென்று சச்சின் பைலட் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை.
தற்போது முதல்வருக்கு எதிராக சச்சின் பைலட் நேரடியாக மோத ஆரம்பித்துள்ளதால், மீண்டும் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது. இது பற்றி, முதல்வர் அசோக் கெலாட் கூறுகையில், எனது அரசைக் கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசி வருகிறது. ஒரு எம்.எல்.ஏ.வுக்கு அட்வான்சாக ரூ.10 கோடியும், ஆட்சியைக் கவிழ்த்த பின்பு ரூ.15 கோடியும் தருவதாகப் பேரம் பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களிடம் பணப் பேரம் பேசியதாக 2 பேரை மாநில போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக முதல்வர் கெலாட் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. இதனால், கெலாட் மீது துணை முதல்வர் சச்சின் பைலட் அதிருப்தி அடைந்தார்.இதையடுத்து அவருடன் பாஜக பேரம் பேசுவதாகவும், அவருக்கு ஆதரவாக 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. ராஜஸ்தான் சட்டசபையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 200. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 107 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் உள்பட 18 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவதால் கெலாட்டுக்கு ஆதரவு 125 ஆக உள்ளது என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

பாஜகவுக்கு 72 எம்.எல்.ஏ.க்களும் 3 சுயேச்சைகளும் ஏற்கனவே ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே, காங்கிரசில் இருந்து பைலட்டுடன் 30 எம்.எல்.ஏ.க்கள் வந்தால், ஆட்சி கவிழ்வது உறுதியாகி விடும்.இந்நிலையில், காங்கிரஸ் உஷாராகி உள்ளது. ராகுல்காந்தி உள்பட சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால், பல தலைவர்களின் போனில் பேசுவதற்குக் கூட பைலட் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட மூத்த தலைவர்கள் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்குச் சென்றனர். அங்கு நேற்று கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவான 16 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. அதே சமயம், 104 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக கெலாட் தரப்பில் கூறப்பட்டது. கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள பேர்மவுன்ட் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இன்று(ஜூலை14) காலையில் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் அனைவரும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாகக் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர்.

இந்த சூழலில், பைலட்டுடன் குறைந்தது 20 எம்.எல்.ஏ.க்களாவது வராவிட்டால், கெலாட் ஆட்சியைக் கவிழ்ப்பது சிரமம் என்று பாஜக உணர்ந்தது. இதனால், அடுத்து என்ன செய்வது என்று திணறி வருகிறது.பாஜக தலைவர் சதீஷ் புனியா கூறுகையில், காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. சச்சின் பைலட் அவமானப்பட்டு, கட்சியில் இருந்து வெளியேறுகிறார். இப்போதைக்கு நாங்கள் சட்டசபையில் கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோர மாட்டோம் என்றார்.தற்போது கெலாட் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வென்று விட்டால், அடுத்த 6 மாதங்களுக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தேவையில்லை. அதனால், காங்கிரஸ் எண்ணிக்கையைக் குறைக்கும் வரை பாஜக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதில்லை எனத் தெளிவாகிறது. எனினும், எத்தனை நாட்களுக்கு எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் பாதுகாக்கும் என்பது தெரியவில்லை.

You'r reading ராஜஸ்தான் காங். ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக திணறல்.. ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் தஞ்சம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை