காஷ்மீரில் இன்று அதிகாலை நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஆனாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் தொடர்ந்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். அவர்களை ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து ஊடுருவலைத் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் அம்சிபோரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள தகவல் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்தது.இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அங்குச் சென்று தீவிரவாதிகளைப் பிடிக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்புப் படைகள் முகாமிட்டு, தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பும் இதே போல் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள் சிலர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர்.