சச்சின் பைலட் திட்டத்தை முறியடித்தது எப்படி? அசோக் கெலாட் பேட்டி..

Not on speaking terms with Sachin Pilot for last 18 months said Ashok Gehlot.

by எஸ். எம். கணபதி, Jul 18, 2020, 17:39 PM IST

துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், ஒன்றரை வருடமாக தன்னிடம் பேசுவதே இல்லை என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். மேலும், பைலட்டின் திட்டத்தை முறியடித்தது எப்படி என்றும் கூறினார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் அரசு உள்ளது. அங்குத் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் பதவி கேட்டு, கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இந்நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சியை உடைத்து விட்டுச் செல்ல தீர்மானித்தார். அவரைக் கொண்டு கெலாட் அரசைக் கவிழ்க்க பாஜகவும் தீவிரமாகக் களமிறங்கியது. ஆனால், கடைசி நேரத்தில் பைலட்டுடன் 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பிரிந்து சென்றனர். அதனால், கெலாட் ஆட்சியைக் கவிழ்ப்பது புஸ் என்று போய் விட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இன்று(ஜூலை18) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:துணை முதல்வராகப் பதவியேற்ற சச்சின் பைலட் பதவியேற்றது முதல் கடந்த ஒன்றரை வருடமாக என்னிடம்(முதல்வர்) பேசுவதே இல்லை. ஒரு அமைச்சர் முதல்வரிடம் பேசுவதே இல்லை என்றால், எப்படி அவரது ஆலோசனையைக் கேட்பார்? ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிக்காரராக இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருக்க முடியாது.
நான் மாணவர் காங்கிரசில் இருந்து இளைஞர் காங்கிரசுக்கு வந்து கட்சியில் 3 முறை முதல்வராகவும், 3 முறை மத்திய அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும், கட்சியின் தேசிய செயலாளராகவும் இருந்திருக்கிறேன். எங்கள் தலைமுறை, கட்சிக்காகக் கடுமையாக உழைத்தது. விசுவாசமாக இருந்தது. இன்றைய தலைமுறை அப்படியில்லை. கட்சிக்குத் துரோகம் செய்யக் கூடாது.

கடந்த ஜூன் 10ம் தேதியன்று சச்சின் பைலட்டும் நள்ளிரவு 2 மணிக்கு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்று, ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டார்கள். நான் ராத்திரி ஒரு மணிக்கு எல்லா மாவட்டத்திற்கும் தொடர்பு கொண்டு கட்சிப் பிரமுகர்களை அழைத்தேன். மாவட்டக் கலெக்டர்களை தொடர்பு கொண்டு பேசினேன். மறுநாள் எல்லோரையும் ஜெய்ப்பூர் வரவழைத்தேன். அதற்குப் பிறகுதான், சச்சின் பைலட் முயற்சி முறியடிக்கப்பட்டது. இப்போதும் பாஜகவின் முயற்சிகளைக் கண்காணித்து வந்ததால், ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. எனக்கு 100 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருக்கிறது. பைலட் பின்னால் 12 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் தான் சென்றார்கள். அதை வைத்துக் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பது சரியா?தான் பாஜகவில் சேரப் போவதில்லை என்று பைலட் கூறியிருக்கிறார். அப்படியானால் அவர் எப்போது வேண்டுமானாலும் காங்கிரசில் பணியாற்ற வரலாம். அவரை கட்டித் தழுவி வரவேற்கத் தயாராக இருக்கிறேன். பைலட்டுக்கு 3 வயது இருக்கும் போது நான் முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது முதல் அவரது குடும்பத்தினருடன் நெருங்கியத் தொடர்பு உண்டு.

இவ்வாறு கெலாட் கூறியுள்ளார்.

You'r reading சச்சின் பைலட் திட்டத்தை முறியடித்தது எப்படி? அசோக் கெலாட் பேட்டி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை