தமிழகத்தில், ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கேற்ப விவசாயிகள் ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயப் பணிகளை தொடங்குவார்கள். அவர்கள், அமோக விளைச்சல் வேண்டி, முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்காக மட்டும் 4 திருவிழாக்கள் நடைபெறும். ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய்க் காப்பு திருவிழா ஆகியவையே அந்த திருவிழாக்கள்.
ஆடி முளைக் கொட்டு திருவிழாவில். அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்நாட்களில் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் உலா வருவார்கள்.இந்நிலையில், மீனாட்சியம்மன் கோயிலில் வரும் 20ம் தேதி முளைக் கொட்டு திருவிழா தொடங்குகிறது. 30ம் தேதி வரை 10 நாட்களுக்கு இந்த திருவிழா நடைபெறும். தற்போது கொரோனா தொற்று மதுரையில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், இந்த திருவிழாவுக்குப் பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம், ஆடி முளைக் கொட்டு திருவிழா நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடத்தப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.