அசாமில் பெய்த கனமழையால் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இது வரை 89 பேர் பலியாகியுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த வாரம் முழுவதும் கன மழை கொட்டியது. இதனால், பிரம்ம புத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நதிகளை ஒட்டியுள்ள 2526 கிராமங்களில் வெள்ளம் புகுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 26 மாவட்டங்களில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 525 ஏக்கர் பாசன நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின.
பா்பெட்டா, திப்ரூகர், போன்கைகான், தின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்களில்தான் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளப் பாதிப்பு சம்பவங்களில் இது வரை 89 பேர் உயிரிழந்துள்ளனர். 120க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில பேரிடர் மேலாண்மை மீட்பு படைகள், ஆங்காங்கே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றன. வீடுகளை இழந்த 45,281 பேர் 395 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் மோசமான நிலவரம் குறித்து முதலமைச்சர் சோனாவாலுடன் பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சில் கேட்டறிந்தார். மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று அப்போது பிரதமர் உறுதியளித்தார்.