தமிழகத்தில் நேற்று வரை கொரோனா நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2700 ஆக அதிகரித்தது. இதற்கிடையே, கடந்த மார்ச் முதல் இறந்தவர்களில் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பலி 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் அதிகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியில்தான் தொடர்ந்து அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று(ஜூலை22) ஒரே நாளில் 5849 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 74 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 86,492 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4910 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 31,583 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று மட்டுமே 74 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 2700 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1171 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 89,561 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 223 பேருக்கும், காஞ்சிபுரம் 325, மதுரை 197, திருவள்ளூர் 430 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 10,495 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 8705 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 10,210 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.
கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த புள்ளி விவரங்களை நேற்று மாலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கடந்த மார்ச் முதல் இது வரை சாதாரணமாக இறந்தவர்களில் கொரோனா பாதிப்பு இருந்து இறந்தவர்கள் விடுபட்டிருக்கிறார்களா என்று ஒரு குழு ஆய்வு செய்தது. இதன்படி, மேலும் 444 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த 444ஐயும் கொரோனா இறப்புகளில் சேர்த்துப் பதிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.