மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் பலாசியா சாலையோரத்தில் டிபன் கடை நடத்தி வருபவரின் 12 வயது மகன் ராஜ். பள்ளிக்கூடம் முடிந்த பின்பு தந்தையுடன் சாலையோர டிபன் கடையில் ராஜுக்குப் பணி. வேலைப் பார்க்கும்போது ராஜ் பார்க்கும் காட்சிகள் அவன் மனதில் ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியது. தங்கள் கடைக்கு அருகே தினமும் போலீஸ் ஒருவர் நின்று வேலைசெய்வதைப் பார்த்து தனக்கும் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என ஆசை தோன்றுகிறது அந்த சிறுவனுக்கு. மனதில் ஆசை இருந்தாலும் அதைச் சொல்ல முடியாத சூழ்நிலையில் சிறுவனின் குடும்பம் இருக்கிறது. வறுமையில் வாடி வரும் ராஜுவின் குடும்பம் அவனைப் படிக்க வைக்க முடியாத சூழலில் உள்ளனர்.
இருந்தாலும் தன் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறான் சிறுவன் ராஜ். அவன் கனவுக்கு வண்ணம் தீட்டி வருபவர் போலீஸ் ஆபீஸர் வினோத் தீக்ஷித். ஆம், எந்தக் கடையின் அருகே நின்று வேலைபார்த்து சிறுவன் மனதில் ஆசை வளர காரணமாக இருந்த அதே காவல் அதிகாரி தான் வினோத் தீக்ஷித். சிறுவனின் கனவை அறிந்து தற்போது தினமும் பகலில் தனது போலீஸ் வேலையைப் பார்த்துக்கொண்டே, இரவில் சிறுவனுக்கு ஆசிரியராகவும் மாறி டியூசன் எடுத்து வருகிறார் வினோத்.இது தொடர்பாக பேசியுள்ள வினோத், ``சிறுவனின் அப்பா டிபன் கடை நடத்தி வருகிறார். தாத்தாவும் நடைபாதை வியாபாரிதான். ராஜ் படிக்க ஆசைப்பட்டாலும், அவர்கள் குடும்பத்தில் அவனை டியூஷனுக்கு அனுப்பக் கூட முடியவில்லை.
அதனால் நானே அவனின் கனவை நனவாக்க ஆசைப்பட்டேன். காலை போலீஸ் ஸ்டேஷன் சென்றால் மாலை தான் திரும்புவேன். ஆனால் ட்யூட்டி முடிந்தால் நேராக வீட்டுக்குச் செல்லாமல், சிறுவனின் கடைக்குச் செல்வேன். நடைபாதையில் உட்கார்ந்து அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பேன்.கடந்த ஒரு மாதமாகப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறேன். ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை தற்போது கற்றுக்கொடுக்கிறேன். ராஜ் ஆர்வமாகப் படிக்கிறான். அவனின் ஆர்வத்தையும் விடா முயற்சியையும் பார்க்கும் போது நிச்சயம் ஒருநாள் காவல் அதிகாரியாக வருவான்" எனப் பூரிப்புடன் பேசுகிறார்.