ராஜஸ்தானில் கவர்னருடன் முதல்வர் கெலாட் மோதல்.. தொடரும் அரசியல் இழுபறி..

Rajasthan c.m. Gehlot meets governor to convene assembly session.

by எஸ். எம். கணபதி, Jul 29, 2020, 14:34 PM IST

ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு முதல்வர் கெலாட் 3 முறை கடிதம் அனுப்பியும், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறார். இதனால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதற்குக் காங்கிரஸ் தலைமை அசைந்து கொடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. இதற்கேற்ப, பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார். இதற்கிடையே, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக அரசுதரப்பில் கூறப்பட்டது. இதனால், 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் கெலாட்டுக்கு மெஜாரிட்டி நீடிக்கிறது. இதற்கிடையே, பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் சி.பி.ஜோஷி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று ஐகோர்ட் தடை விதித்தது.

இந்நிலையில், சட்டசபையைக் கூட்டி தனது மெஜாரிட்டியை நிரூபித்து விட்டால், அதற்குப் பிறகு 6 மாதங்களுக்கு மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்கக் கோர முடியாது என்று கெலாட் முடிவெடுத்தார். சட்டசபையைக் கூட்டுவதற்குச் சபாநாயகர் ஜோஷி முடிவு செய்து கவர்னருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா அதற்கு அனுமதி தர மறுத்து முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். அதன்பின், கொரோனா குறித்து விவாதிக்கச் சட்டசபையைக் கூட்ட வேண்டுமென்று கவர்னருக்கு முதல்வர் கெலாட் கடிதம் அனுப்பினார். அதற்கும் கவர்னர் அனுமதி மறுத்தார். 3வது முறையாகக் கடிதம் அனுப்பிய முதல்வர் கெலாட், இன்று(ஜூலை29) ராஜ்பவனுக்கு சென்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை நேரில் சந்தித்து தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.

ஆனாலும் சட்டசபையைக் கூட்ட அனுமதித்தால், கெலாட் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்று விடுவார் என்று கருதி, கவர்னர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறார். மேலும், கொரோனா பரவுவதால், சட்டசபையைக் கூட்ட முடியாது போல் காட்டுவதற்காக புதிய யுக்தியைக் கையாண்டுள்ளார். அதாவது, கொரோனா பரவுவதால் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவையே ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.இந்த நிலையிலும், முதல்வர் அசோக் கெலாட் விடாப்பிடியாக கவர்னருடனும், மத்திய அரசுடனும் மோதி வருகிறார். இந்த அரசியல் குழப்பங்களால் ராஜஸ்தானில் நிர்வாகமும் ஸ்தம்பித்து வருகிறது.

You'r reading ராஜஸ்தானில் கவர்னருடன் முதல்வர் கெலாட் மோதல்.. தொடரும் அரசியல் இழுபறி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை