தமிழகத்தில் இது வரை 2.27 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.தமிழகத்தில் நேற்று(ஜூலை28) ஒரே நாளில் 6972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 64 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 27,688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4707 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 66,956 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 88 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்தது.
சென்னையில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 96,438 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. செங்கல்பட்டில் நேற்று 365 பேருக்கும், காஞ்சிபுரம் 233, மதுரை 345, திருவள்ளூர் 486 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 13,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,392 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 12,806 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 20 மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி போன்ற மாவட்டங்களில் நேற்று சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.தர்மபுரி, பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இது வரை நோய் பாதித்த 2 லட்சத்து 27 ஆயிரம் பேரில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேர் குணம் அடைந்த நிலையில், தற்போது 57,073 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.