கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் 17 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்பட பல வி.ஐ.பி.க்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ உள்பட பல அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மகளுக்கும் கொரோனா தொற்று பாதித்தது. இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் கொரோனா பாதித்துள்ளது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் தனது
ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதித்துள்ளதால் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாகவும், தன்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளார்.