370 ரத்தாகி ஓராண்டு நிறைவு.. காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னராக மனோஜ் சின்கா நியமனம்..

by எஸ். எம். கணபதி, Aug 6, 2020, 10:04 AM IST

காஷ்மீர் யூனியன் பிரதேச லெப்டினன்ட் கவர்னராக மனோஜ் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்படப் பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும், மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு நேற்றுடன்(ஆக.5) ஓராண்டு முடிவுற்றும் இது வரை அங்கு மாமூல் நிலை திரும்பவில்லை. முப்தி முகமது சயீத் உள்படப் பலர் இன்னும் சிறைக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதும், என்கவுண்டர்கள் நடப்பதும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே, ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக நியமிக்கப்பட்டிருந்த கிரிஷ் சந்திர முர்மு நேற்று பதவியை ராஜினாமா செய்தார். அவரை மத்திய தணிக்கைத் துறைத் தலைவராக(சி.ஏ.ஜி) நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியான முர்மு, குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவரிடம் முதன்மைச் செயலாளராக இருந்தவர்.

அதற்கு முன்பு குஜராத் உள்துறை அமைச்சராக அமித்ஷா இருந்த போது உள்துறையில் இணைச் செயலாளராக பணியாற்றியவர். 1985ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் தற்போது சி.ஏ.ஜி.யாக நியமிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முர்முவின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னராக மனோஜ் சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


More India News

அதிகம் படித்தவை