கொரோனாவால் கிரிக்கெட் உள்ளிட்ட மொத்த விளையாட்டுகளும் முடங்கிப் போயிருக்கிறது. சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கொரோனா காலத்திலும் பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. இதனால் ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருக்கிறது. கொரோனா பரவலால் வீரர்கள் தங்கள் பயிற்சியை மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். இதற்கிடையே, இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, தனது கொரோனா அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார். அதில், ``கொரோனா பரவலால் பல நாட்களாகப் பேட்டை எடுக்கவில்லை.
என் கிரிக்கெட் வாழ்க்கையில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி இத்தனை நாள்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இவ்வளவு காலம் விளையாடாமல் இருப்பது இது தான் முதல்முறை. இப்போது மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் போது சற்று சவாலானதாகவே இருக்கும். நீண்ட நாள் விளையாடாததால் நான் எந்த நிலையில் இருக்கிறேன், மன நிலை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் உடல்ரீதியாக உறுதியாகவே இருக்கிறேன் என நம்புகிறேன்.
ஐபிஎல் தொடங்க இன்னும் நிறையக் காலம் இருக்கிறது. அதனால் எந்த அவசரமும் இப்போது இல்லை. அமீரக மைதானங்கள் வேகம் குறைந்தவை. இந்திய ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. ஆனால் அங்கு 40 டிகிரி வெயில் கொளுத்தும். 40 டிகிரி வெப்ப நிலையைச் சமாளிப்பது சவாலானது. அங்குள்ள கால நிலையை நேரில் பார்த்தால் சரியான வியூகங்களை வகுக்கலாம். ஐபிஎல் போட்டிகளைப் பொறுத்தவரை இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு நம்பிக்கை அதிகமாக ஏற்படும்." என்று பேசியுள்ளார்.