இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு கமல், ஷங்கர், லைகா நிறுவனம் இழப்பீடு

by Chandru, Aug 6, 2020, 19:07 PM IST

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் இந்தியன் 2 இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவில் நடந்தது. அப்போது படப்பிடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய கிரேன் அறுந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த பயங்கர விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டைரக்டர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு நிதி இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் அலுவலகத்தில் இன்று மாலை நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். இதில் கமல்ஹாசன், ஷங்கர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது குறித்து பெப்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியன் 2 படப்பிடிப்பில் மரணம் அடைந்த தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு 4 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. கமல்ஹாசன், ஷங்கர் ஆர்.கே. செல்வமணி ஆகியோர் இணைந்து வழங்கினார்கள். இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மரணமடைந்த 3 குடும்பங்களுக்கும் மற்றும் விபத்துக்குள்ளாகிய தொழிலாளி குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. தயாரிப்பு உதவி நிர்வாகிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் எஸ்.ஆர். சந்திரன் மனைவி ராதா, மதுவின் தந்தை மால கொண்டையா, உதவி இயக்குனர் கிருஷ்ணாவின் மனைவி அமுதா, லைட்மேன் ராமராஜன் சகோதரி பெற்றுக் கொண்டார்கள்.

மேற்கண்ட நிவாரணத் தொகையை லைகா புரொடக்ஷன் 2 கோடி ரூபாயும், கமல்ஹாசன், ஷங்கர் இணைந்து தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்கினார்கள். பெப்ஸி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தலைவர் ஆர். கே.செல்வமணி, பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் பி.என். சுவாமிநாதன் மற்றும் இணைச் செயலாளர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை