இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. உலக அளவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து 3வது இடத்தில் இந்தியா உள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளில் பரவியிருக்கிறது. அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்து நோய்ப் பாதிப்பில் உலக அளவில் 3வது இடத்தில் இந்தியா உள்ளது.நாட்டில் நேற்று (ஆக.6) மட்டும் புதிதாக 62,538 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை இன்று 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மொத்தம் 20 லட்சத்து 27,075 பேருக்கு நோய் பாதித்திருக்கிறது. இதில் 13 லட்சத்து 78,106 பேர் குணம் அடைந்துள்ளனர். 6 லட்சத்து 78,106 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று மட்டும் 886 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதையும் சேர்த்து கொரோனா பலி எண்ணிக்கை 41,585 ஆக அதிகரித்திருக்கிறது.இந்தியாவில் கடந்த ஜனவரி 30ம் தேதி முதலாவதாகக் கேரளாவில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு, 109 நாள் கழித்து மே 19ம் தேதியன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சமானது. அதற்குப் பிறகு 15 நாளில் 2வது லட்சம், 10 நாளில் 3வது லட்சம், 8 நாளில் 4வது லட்சம் என்று வரிசையாகப் பாதிப்பு அதிகரித்து வந்தது. தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில்தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. எனினும், தற்போது ஆந்திரா, கர்நாடகா, உ.பி., பீகார், மேற்கு வங்க மாநிலங்களிலும் அதிக அளவு தொற்று பாதிப்பு கண்டறியப்படுகிறது. தற்போது வரை அமெரிக்காவில் 50 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 29 லட்சம் பேருக்கும் கொரோனா பாதித்திருக்கிறது. அமெரிக்காவில் 1.62 லட்சம் பேரும், பிரேசிலில் 98 ஆயிரம் பேரும் உயிரிழந்துள்ளனர்.