பெங்களூரு கலவரத்தில் ஒரு நெகிழ்ச்சி.. அனுமன் கோவிலை காத்த இஸ்லாமியர்கள்!

by Sasitharan, Aug 13, 2020, 12:20 PM IST

இந்தியாவின் சிலிக்கான் வேலி எனப்படும் பெங்களூரு நகரத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டது. பெரும் கலவரம் வெடித்து இருவர் தங்கள் உயிரை இழந்தனர். கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மத வெறுப்பைத் தூண்டும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து நவீன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும், போலீஸ் புகாரை வாங்க மறுக்கவே, மக்கள் சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டனர். ஆர்ப்பாட்டம் கலவரமாக மாற பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ. வீடு அருகே நேற்று முன்தினம் இரவு வன்முறை வெடித்தது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு, அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, தீ வைத்தனர். எம்.எல்.ஏ. வீட்டின் மீது கற்களை வீசினர். கலவரம் குறித்து தகவலறிந்து ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றனர். எனினும், கலவரக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், இரண்டு பேர் பலியாகினர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் மேலும் பரவாமல் இருக்கப் பெங்களூரு நகரம் முழுவதும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் பதிவு போட்ட எம்எல்ஏவின் மருமகன் நவீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய கலவரத்துக்கும் நடுவில் பெங்களூருவில் நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கலவரப் பகுதியிலிருந்த ஒரு இந்து கோவிலை ஒரு சிலர் தாக்க முற்பட இஸ்லாமிய இளைஞர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அரணாக நிற்கக் கோவிலில் சேதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. இந்த நெகிழ்ச்சி சம்பவத்துக்குக் காரணமான முகமது காலித் என்ற இளைஞர் கூறுகையில், `நான் இரவில் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது, 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இங்கிருக்கும் அனுமன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தனர். சில நொடிகளில் ஆட்டோவில் இருந்து வந்திறங்கிய மேலும் சிலர் கல் மூட்டையை இறக்கி வைத்தனர்.

அவர்களின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதால், உடனே என் நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்து அனுமன் கோவிலுக்கு வரவழைத்தேன். பின்பு, அனைவரும் மனிதச் சங்கிலி அமைத்து நள்ளிரவு 11 மணியில் இருந்து 2 மணி வரை கோவிலின் பாதுகாப்புக்கு நின்றோம்" எனக் கூறியுள்ளார். இஸ்லாமிய இளைஞர்கள் அனுமன் கோவிலுக்குப் பாதுகாப்புக்காக நின்ற புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

READ MORE ABOUT :

More India News