நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாகக் கடந்த ஜூன் மாதம் மதியத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. அது பெரும் அதிர்ச்சியைத் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதுபற்றி மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சுஷாந்த் தந்தை கே கே. சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்தார். இதனால் மும்பை, பாட்னா போலீக்கு இடையே மோதல் போக்கு உருவானது, விசாரணை நடத்த மும்பை வந்த பாட்னா போலீசை வலுக்கட்டாயமாக கொரோனா முகாமில் அடைத்தனர்.
தன் மீது பாட்னா போலீசில் உள்ள வழக்கை மும்பை போலீஸுக்கு மாற்ற வேண்டும் என்று ரியா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாட்னா போலீஸ் பரிந்துரை செய்தது. அதேபோல் அரசியல் பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமியும், சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தற்போது சுஷாந்த் வழக்கை சி பி ஐ விசாரிக்கிறது.சுஷாந்த் வழக்கில் நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டு துபாய் சென்று பாத் டப்பில் மூழ்கி இறந்த ஸ்ரீதேவி மரணம் அடைந்த விவகாரம் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.
அப்போதும் அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் உருவானது. பின்னர் துபாய் போலீஸ் விசாரணையே போதுமானதாக இருக்கிறது என்று அப்பிரச்சனை முடிவுக்கு வந்தது. தற்போது சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிப்பதால் ஸ்ரீதேவி வழக்கையும் விசாரிக்க சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இணைய தளத்தில் குரல் ஒலிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால் துபாய் போலீஸ் விசாரணையே போதுமா அல்லது சிபிஐ விசாரணை வேண்டுமா என்று அவரது குடும்பத்தினர் விருப்பத்தைப் பொறுத்தே இதுபற்றி முடிவெடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.