உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த சுதீக்ஷா. 20 வயதான இவர், 12ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 98 சதவிகித மதிப்பெண் எடுத்தவர். இதையடுத்து அமெரிக்காவில் சென்று கல்லூரி படிப்பு படிக்க, இவருக்கு அரசின் ஸ்காலர்ஷிப்பாக ரூ.3.80 கோடி கிடைத்துள்ளது. இதையடுத்து அமெரிக்காவில் கல்லூரி படிப்பைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே, கொரோனா பரவலை அடுத்து ஜூன் மாதத்தில் சொந்த ஊர் திரும்பிய சுதீக்ஷா, வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது உறவினர் உடன், சொந்த ஊரில் இருந்து அருகில் உள்ள கவுதம் புத்தா நகருக்கு பைக்கில் சென்றிருக்கிறார் சுதீக்ஷா. அப்போது நடந்த விபத்தில் சுதீக்ஷா பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்கு ஈவ் டீசிங் காரணம் எனப் புகார் எழுந்தது. ``சுதீக்ஷாசென்ற பைக்கை புல்லட்டில் வந்த இருவர் பாலோ செய்தனர். சுதீக்ஷாவை கமெண்ட் அடித்துக்கொண்டே அவர்கள் பாலோ செய்தனர்.
புலந்த்ஷாஹர் நகரைக் கடந்தபோது, ஒரு கிராமத்திற்குள் நுழைந்தோம். அங்கு புல்லட் பைக் பல முறை எங்களை முந்தியது; இருவரும் பொறுப்பற்ற முறையில் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தார். ரோட்டிலேயே ஸ்டண்ட் செய்யத் தொடங்கினார். நாங்கள் பைக்கின் பிரேக்கை அழுத்த, பின்னால் வந்த வண்டி எங்கள் மோதியது. நாங்கள் இருவரும் விழுந்தோம். சுதீக்ஷாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே சுதீக்ஷா உயிரிழந்தார். அந்த புல்லட்டில் வந்த இருவரை எங்களால் அடையாளம் காண முடியவில்லை, நாங்கள் விபத்தைச் சந்தித்த சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து தப்பினர்" என்கிறார் அவருடன் சென்ற உறவினர்.
இதை வைத்து சுதீக்ஷாவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். ஈவ் டீசிங்கால் முதல் மார்க் எடுத்த மாணவி உயிரிழந்தார் என்ற செய்தி பரவ பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சுதீக்ஷாவை ஈவ் டீசிங் செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சுதீக்ஷாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் டிவிட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் மாயாவதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்துவந்தது.
இந்த வழக்கு விசாரணையின் ஆரம்பத்திலேயே, ``விபத்து நடந்தபோது ஈவ் டீசிங் செய்தார்கள் என்பதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை. சுதீக்ஷா சென்ற பைக்கை ஓட்டியது அவரது மாமா கிடையாது. அவரின் சகோதரன்தான். அவரின் சகோதரன் ஒரு மைனர். சுதீக்ஷா ஹெல்மெட் அணியாததால்தான் உயிர்விட நேர்ந்துள்ளது" எனப் போலீஸ் கூறியது. தற்போது இதனை ஆதாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில், சுதீக்ஷாவின் மாமா அதாவது அவரை பைக்கில் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் சதேந்திரா அருகில் உள்ள தாத்ரி என்ற இடத்தில் இருந்துள்ளார். அதற்கு ஆதாரமாக அவரது மொபைல் லொகேஷன் அங்கேதான் காட்டுகிறது. சுமார் இரண்டு மணி நேரம் கழித்துத் தான் சதேந்திரா விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளார். அவர் சென்ற முழு வழியையும், விபத்து நடந்த இடத்தை எப்போது அடைந்தார் என்பதையும் அவரது மொபைல் லொக்கேஷன் படி நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அது மட்டுமில்லாமல், சுதீக்ஷாவை பைக்கில் ஏற்றிவந்தது ஒரு சிறுவன் போல் இருக்கிறான். இதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. அவர் மைனர் சந்தேகிக்கிறோம். அவனைக் காப்பாற்ற இந்த வழக்கு அவரது உறவினர்களால் டுவிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
அரசின் ஸ்காலர்ஷிப் பணத்தில் படித்த சுதீக்ஷாவுக்கு இன்சூரன்ஸ் இருக்கிறது. இதை பெறுவதற்காகக் கூட விபத்தை மறைத்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். விசாரணையில் இதுவரை, ஈவ் டீசிங்கிற்கான எந்த ஆதாரத்தையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" எனக் கூறியுள்ளார் போலீஸ் அதிகாரி சந்தோஷ்குமார் சிங். இவரின் அறிவிப்பு இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.