நாடு முழுவதும் நேற்று(ஆக.17) ஒரே நாளில் சுமார் 9 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் இது வரை 27 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. நேற்று(ஆக.17) ஒரே நாளில் 54,286 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்களில்தான் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இந்நோய்க்கு நேற்று பலியான 880 பேரையும் சேர்த்தால் இது வரை 51,025 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், உலக நாடுகளை ஒப்பிடுகையில் இறப்பு விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தேசிய அளவில் கொரோனா இறப்பு விகிதம் 1.92 சதவீதமாக உள்ளது. 30 மாநிலங்களில் இதை விட இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.
குறிப்பாக, அருணாசலப் பிரதேசம், அசாம், கேரளா, பீகார், ஒடிசா, இமாச்சலப்பிரதேசம், கோவா, சட்டீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இறப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் 1.71, கர்நாடகா 1.74, ஜம்முகாஷ்மீர் 1.9 சதவீதமாக உள்ளது.நாடு முழுவதும் இது வரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்று 8 லட்சத்து 97 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில் 8.81 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.