பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குப் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு, பிரணாப்புக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், வென்டிலேட்டரில் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவருக்குச் சுயநினைவு போனதால் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியது. இதற்கிடையே, அவர் மரணமடைந்து விட்டதாகத் தகவல் பரவி பின்னர், அத்தகவல் பொய்யானது என்று மறுக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, பிரணாப் உடல்நிலை, தொடர்ந்து சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று(ஆக.19) வெளியிட்ட பதிவில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அனைவருடைய நல்வாழ்த்துக்களாலும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகளாலும் அவரது உடல்நிலை தேறி வருகிறது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதால், அவர் விரைவில் பூரண குணம் அடைவார். அவர் விரைவில் குணம் அடையப் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.