சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இளம்பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று பாதியிலேயே திரும்பிப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ரெஹானா பாத்திமா. ஆக்டிவிஸ்டான இவர் கொச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அடிக்கடி பிரச்சனைக்குரிய ஏதாவது செயலில் ஈடுபட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவது இவரது வழக்கம். கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முத்த போராட்டம் நடந்தது. பொது இடத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து முத்தம் கொடுத்து ஒரு போராட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன் சபரிமலை பக்தர்கள் அணியும் உடையை மிகவும் ஆபாசமான முறையில் அணிந்து போஸ் கொடுத்து, அந்த போட்டோவை இவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக இவர் மீது புகார் செய்யப்பட்டது. இதனால் போலீசார் ரெஹானா பாத்திமா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இவர் சபரிமலைக்கு இருமுடிக் கட்டுடன் தரிசிக்கச் சென்றார். ஆனால் பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து தரிசனம் செய்ய முடியாமல் இவர் பாதியிலேயே திரும்பிச் சென்றார்.
இந்நிலையில் கடந்த மாதம் இவர் தனது அரை நிர்வாண உடலில் தன்னுடைய 12 மற்றும் 10 வயதான இரண்டு குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்தார். இதன் பின்னர் அந்த வீடியோவை யூடியூபிலும், தன்னுடைய பேஸ்புக்கிலும் வெளியிட்டார். இதனால் கேரளாவில் மீண்டும் இவரால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி திருவல்லா போலீசில் பாஜக சார்பில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார்ரெஹானா பாத்திமா மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். நீங்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டதின் மூலம் சமூகத்திற்கு என்ன கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதி கேட்டார். உச்ச நீதிமன்றத்திலும் முன்ஜாமீன் மனு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேறு வழியின்றி கடந்த சில தினங்களுக்கு முன் அவர் கொச்சி போலீசில் சரணடைந்தார். பின்னர் ஜாமீன் கோரி எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் ரெஹானா பாத்திமாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே அடுத்தடுத்து வந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் பிஎஸ்என்எல் நிர்வாகம் ரெஹானா பாத்திமாவை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது.