மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் 82 பேர் இருந்திருக்கலாம் என்று கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. இன்றுவரை நடந்த தேடுதல் வேட்டையில் 63 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இன்று ஒரு பெண்ணின் உடல் நிலச்சரிவு நடந்த இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கரையில் ஒதுங்கிக் கிடந்தது. இவரது பெயர், விவரம் தெரியவில்லை. இதையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 63ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 7 பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலச்சரிவில் ஏற்பட்ட சோகம் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் மனிதனுக்கும், விலங்குக்கும் இடையே நடந்த ஒரு பாசப் போராட்டம் குறித்த தகவல் வெளிவந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கிய ஒரு குடும்பத்தினர் குவி என்ற பெயரில் ஒரு நாயைச் செல்லமாக வளர்த்து வந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நாய் மட்டும் நிலச்சரிவிலிருந்து எப்படியோ தப்பித்து விட்டது. இந்த சம்பவத்தில் தனது எஜமானர் குடும்பமே பலியானது தெரியாமல் நிலச்சரிவு நடந்த அன்று முதல் அந்த நாய் அவர்களைத் தேடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அதை அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கவனித்தனர். அந்த நாய் சென்ற இடத்தில் எல்லாம் போய் தேடிப் பார்த்தபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. ஆனாலும் அந்த நாய் ஒரு வாரத்திற்கும் மேலாக அங்குமிங்கும் யாரையோ தேடி ஓடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் விபத்து நடந்த 8வது நாள் அந்த நாய் அருகிலுள்ள ஆற்றை நோக்கிக் குரைத்துக் கொண்டிருந்தது. இதையடுத்து மீட்புப் படையினர் அங்குச் சென்று பார்த்தபோது அங்கு 2 வயதான தனுஷ்கா என்ற சிறுமியின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலைப் பார்த்துத் தான் நாய் குரைத்தது என்றும், அந்த நாயின் எஜமானரின் மகள் தான் தனுஷ்கா என்றும் பின்னர் தான் தெரிய வந்தது. தனுஷ்காவின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் குவி நாய் அங்கிருந்து சென்று விட்டது. நாயைக் காணாததால் அங்கு மீட்புப் பணியில் இருந்த போலீஸ் நாய் பயிற்சியாளரான அஜித் மாதவன் அதைத் தேடிச் சென்றார்.
அப்போது சிறிது தொலைவில் அந்த நாய் மிகவும் களைப்பாகப் படுத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. களைப்புடன் காணப்பட்டதால் அதற்கு அவர் உணவு கொடுத்தார். முதலில் சாப்பிட மறுத்தாலும் பின்னர் அஜித் மாதவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு அந்த குவி நாய் சாப்பிட்டது. சிறிது நேரத்திலேயே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அந்த நாயை அங்கேயே விட்டுவிட்டு வர அஜித் மாதவனுக்கு மனமில்லை. இதையடுத்து அந்த நாயை வளர்த்து அதற்குச் சிறப்பு பயிற்சி கொடுக்க அவர் தீர்மானித்தார். இதற்காக அவர் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடைத்தால் அந்த 'பாசக்கார' குவி நாயை அழைத்துச் சென்று சிறப்பு பயிற்சி கொடுக்கவும் அவர் தீர்மானித்துள்ளார்.