கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை அடுத்துள்ள மார்டள்ளியை சேர்ந்தவர் பிலவேந்திரன். 70 வயதுக்கும் மேலான இவர் சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்கி கொடுத்து உதவியவர். இதற்காக இவரைக் கைது செய்த கர்நாடக போலீஸ், 1992 காலகட்டத்தில் வீரப்பன் நடத்திய போலீஸுக்கு எதிரான தாக்குதலில் ராமாபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 5 போலீஸாரையும், மின்னியம் காட்டில் மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணா, துணை ஆய்வாளர் ஷகீல் அகமது உள்ளிட்ட 6 போலீஸாரையும், பாலாறு வனப்பகுதியில் வீரப்பன் கண்ணிவெடி தாக்குதல் மூலம் 22 பேரையும் கொன்று அதிர்ச்சியூட்டினார்.
இந்த வழக்குகளில் வீரப்பனுடன், அரிசி, பருப்பு வழங்கிய பிலவேந்திரனையும் குற்றவாளியாகச் சேர்த்தது. 1993ம் ஆண்டு மே 23ம் தேதி அதிரடியாக அவரை கைதும் செய்தது. அப்போது தொடங்கிய அவரது சிறைவாசம் நேற்றுமுந்தினம் வரை தொடர்ந்தது. இந்த வழக்குகளில் 2001ல் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் பிலவேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்பு நடந்த மேல்முறையீட்டு வழக்கில் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்டது. பின்பு சீராய்வு மனு தாக்கல் செய்து அவரது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
பெலகாவி சிறையில் 11 ஆண்டுகள், மைசூரு சிறையில் 16 ஆண்டுகள் என 27 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார். மைசூரு சிறையில் இருந்த பிலவேந்திரனுக்கு மூன்று தினங்கள் முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கே.ஆர்.எஸ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு மரணமடைந்தார் பின்னர், பிலவேந்திரனின் உடல் நேற்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, கொள்ளேகால் அருகேயுள்ள சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.