நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடா? அப்போ இதை பின்பற்றுங்க..

Easy ways to strengthen your immune system

Aug 21, 2020, 13:43 PM IST

சீனாவில் ஆரம்பித்த கொரோனா நோய் தொற்று தற்போது உலகெங்கும் உள்ள குக் கிராமங்கள் வரை பரவி மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒரு பக்கம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். மறு பக்கம் உயிர்கள் செத்து மரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில் நம் உடல் நலனில் அக்கறைக் கொள்ள வேண்டும்.

கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்காக கொரோனா வரும் வரை காத்திருக்க வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி என்பது கொரோனா நோய் தொற்றுக்கு மட்டுமல்ல, சீசனல் ப்ளூ எனப்படும் வானிலை மாற்றம் காரணமாக பரவும் வைரஸ் தொற்று, காய்ச்சல் போன்றவற்றுக்கும் இது உதவும்.

அதனால், கண்டதையும் சாப்பிடாமல் அளவாக சாப்பிட்டாலும் ஆரோக்கியமானதை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

கொரோனா வருவதற்கு முன்பே நாம் நம் உடலை இயற்கையான முறையில் எப்படி எல்லாம் தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதை இங்கே காணலாம்.

மன அழுத்தம் வேண்டவே வேண்டாம்:

நாம் வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும், உடலுக்கும் மிக நெருக்கமான தொடர்பு உண்டு. அதாவது, நாம் சிரித்தால், மகிழ்ச்சியாக இருந்தால் நம் உடலில் சுரக்கும் ஹார்மோன் நன்மையே தரும். இதுவே நாம் சோகத்திலும், மன அழுத்தத்திலும் இருந்தால் கார்டிசால் என்கிற ஹார்மோன் வெளியாகி நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை குறைத்துவிடும். அதனால் எப்போதும் நம்மை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வதே சிறந்தது. தினமும் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். மகிழ்ச்சியுடன் வாழலாம்.

உணவில் காய்கறிகள்:

நாம் சாப்பிடும் உணவில் காய்கறிகள் அதிகம் இருப்பது அவசியம். குறிப்பாக, பச்சை காய்கறிகள், கீரை வகைகள் தினமும் கட்டாயம் உணவில் இருக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் பணியை செய்வது கல்லீரல். அதனால், கல்லீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளக்கூடிய முட்டைகோஸ், புரொக்கோளி போன்ற காய்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

மல்டிவிட்டமின்கள் அவசியம்:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின்கள் நம் உடலில் அதிகளவில் சேர வேண்டும். முக்கியமாக, வைட்டமின் ஏ, பி6, சி, டி மற்றும் இ ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை அதிகரிக்க உதவுகிறது.

குறிப்பாக, வைட்டமின் சி குறைப்பாடு உள்ளவர்களுக்கே கொரோனா உள்பட பல்வேறு நோய்கள் எளிதாக தொற்றிக் கொள்கிறது. மல்டிவிட்டமின்கள் நமக்கு மாத்திரை, சிரப் வகைகளிலும் கிடைக்கிறது. அல்லது நாம் உண்ணும் உணவு மூலமும் மல்டிவிட்டமின்கள் கிடைக்கும். சிட்ரஸ் பழங்களால் நமக்கு வைட்டமின் சி சத்து அதிகளவில் கிடைக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழங்கள் தினமும் சாப்பிடுவது நல்லது. இதைத்தவிர, கீரை வகைகள், குடை மிளகாய், தயிர், பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள், தானிய வகைகள், பாதாம், பப்பாளி, இறைச்சியில் மீன் வகைகள் போன்றவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

உடற் பயிற்சி, நல்ல தூக்கம் அவசியம்:

தினமும் நடைபயிற்சி, எளிமையான உடற்பயிற்சிகள் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடலை அவ்வபோது அசைவிலேயே வைத்துக் கொள்ள வேண்டும். வேலை சுமை காரணமாக பலர் கணினி முன்பு பல மணி நேரம் அசையாமல் அமர்ந்து இருப்பார்கள். இவர்கள் குறைந்தது அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களுக்கும், கை, கால் உடலுக்கும் எளிய பயிற்சிகள் வழங்குவது அவசியம்.

தினமும் இரவில் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் உடல் நலத்தை காக்கும். தூக்கமின்மை நோய் எதிர்ப்பு சக்தியின் ஆற்றலை குறைத்துவிடும். இரவில் செல்போன் பயன்பாட்டை தவிருங்கள்.

நல்ல வாழ்க்கைமுறை, நல்ல உணவு பழக்கங்கள், நல்ல தூக்கம், உடற்பயிற்சி, அதிகளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

You'r reading நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடா? அப்போ இதை பின்பற்றுங்க.. Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை