மலையாளிகளின் முக்கிய பண்டிகையான ஓணம் வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் வழக்கமாக இந்தப் பண்டிகையை ஒட்டி காணப்படும் உற்சாகம் இப்போது இல்லை. பொதுவாகக் கேரளாவில் ஓணம் பண்டிகை காலம் தொடங்கினால் மாநிலம் முழுவதும் களைக்கட்டும். 10 நாட்கள் அனைவரும் தங்களது வீடுகளின் முன் பூக்கோலம் இடுவார்கள். இதற்காகத் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெரும்பாலும் கேரளாவுக்குப் பூக்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள குமரி மாவட்டம் தோவாளையில் இருந்து தினமும் டன் கணக்கில் பூக்கள் கொண்டு செல்லப்படும். நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு மலையாளிகள் தங்கள் வீடுகள் முன் பூக்கோலம் இடத் தொடங்குவார்கள். இந்நிலையில் பூ வியாபாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அனைவரும் தங்கள் வீடுகள் முன் பூக்கோலம் போடத் தயாராக இருப்பீர்கள்.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைவரும் தங்களது பகுதிக்கு அருகில் கிடைக்கும் பூக்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்படும் பூக்களைப் பயன்படுத்தினால் அதன் மூலம் கொரோனா பரவ அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்படும் பூக்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயனின் இந்த அறிவிப்பு தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பூ விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.