கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள நேரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு. இவர் மீது ஏற்கனவே ஏராளமான திருட்டு, அடிதடி உட்பட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இவரது வீட்டுக்கு அருகே ஒரு சாரைப் பாம்பு செல்வதை பிஜு பார்த்தார். இவருக்குப் பாம்புக் கறி என்றால் மிகவும் பிடிக்கும். அடிக்கடி பாம்புகளைப் பிடித்துக் கொன்று தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் சாரைப் பாம்பைப் பார்த்த பிஜு, அதைப் பிடித்துச் சமைத்துச் சாப்பிடத் தீர்மானித்தார். இதையடுத்து அதைக் கொன்று தோலை உரித்துச் சமைத்துச் சாப்பிட்டார். ஆனால் அவருக்குப் போகப் பாம்புக் குழம்பு ஏராளமாக மீதம் இருந்தது. இதையடுத்து அதை மலைப்பாம்பு இறைச்சி என்று கூறி தனது நண்பர்களுக்கு விற்பனை செய்யத் தீர்மானித்தார். உடனடியாக ஒருவருக்கு போன் செய்து தன்னிடம் மலைப்பாம்பு இறைச்சி இருப்பதாகவும் உடனடியாக வந்தால் தருவதாகவும் கூறினார். இந்த தகவல் நேரியமங்கலம் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் பிஜுவை கைது செய்தனர். அவர் சமைத்துச் சாப்பிட்டது போக மீதமிருந்த பாம்புக் கறியையும் வனத்துறையினர் கைப்பற்றினர்.