சோனியா பதவியில் நீடிக்க மன்மோகன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை..

Sonia Gandhi resigned as president in Congress working commitee.

by எஸ். எம். கணபதி, Aug 24, 2020, 14:25 PM IST

காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி விலகினார்.ஆனால், அவரே நிரந்தர தலைவராகப் பதவியில் இருக்க வேண்டும் என்று மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வி அடைந்தது. 2019 தோல்வி குறித்து விவாதிக்கக் கடந்தாண்டு மே 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அப்போது, தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.

இதனால், மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதன்பிறகு, இது வரை முழு நேரத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவரே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அதுவே கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்துக் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அதனால், தான் மீண்டும் தலைவராக விரும்பவில்லை என்றும் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரே தலைவராக வர வேண்டும் என்றும் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் அறிவித்து விட்டனர்.இந்த சூழ்நிலையில், சமீப காலமாகக் காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும், சோனியா பதவி விலகி கட்சிக்கு புதிய தலைவரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும் என்று சிலரும் கூறி வந்தனர்.

மேலும், கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், பூபிந்தர்சிங்ஹூடா, மிலிந்த் தியோரா, மணீஷ்திவாரி, குரியன் உள்பட 27 தலைவர்கள் இணைந்து சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இதில், சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை விமர்சிப்பது போல் சாராம்சம் இருந்ததால், மூத்த தலைவர்கள் பலரும் அதற்குக் கடுமையாகப் பதிலளித்து ஒரு பதில் கடிதம் அனுப்பினர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், இன்று(ஆக.24) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. சோனியா காந்தி தலைமை வகித்தார். கூட்டத்தைத் தொடங்கி வைத்து அவர் கூறுகையில், கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலிடம் ஒரு அறிக்கை அளித்துள்ளேன். அவர் அதை வாசிப்பார் என்றார்.தொடர்ந்து அவரது கடிதத்தை வேணுகோபால் வாசித்தார். அதில், தான் இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகளைக் கட்சியின் செயற்குழு தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அவர் கூறுகையில், சோனியா காந்தி முழு நேரத் தலைவராகத் தொடர வேண்டும். தற்போதைய சூழலில் தலைவர் பதவி பிரச்சனையை எழுப்பது தேவையற்றது. சோனியா பதவி விலகுவது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவர் விலகக் கூடாது என்றார்.தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி பேசுகையில், முக்கிய தலைவர்கள் இந்த தருணத்தில் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கியிருக்கக் கூடாது. சோனியா காந்தியே தலைவராக நீடிக்க வேண்டும். அவர் ஒரு வேளை தனது முடிவில் தீவிரமாக இருந்தால், ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்றார்.இதன்பிறகு, மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டுமென்று கோரினர். எனினும் சோனியா உடனடியாக பதில் அளிக்கவில்லை.

You'r reading சோனியா பதவியில் நீடிக்க மன்மோகன் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை