இன்று நடந்த காங்கிரசின் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ``மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி நடந்து கொண்டிருந்த போது, மூத்த தலைவர்கள் இப்படியொரு பிரச்னையை எழுப்பியது ஏன்? பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்து கொண்டு காங்கிரசை பலவீனப்படுத்துகிறார்களா?" என்று மூத்த தலைவர்கள் சிலர் சோனியா காந்தியை தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டி கோபமாக பேசியதாக செய்திகள் வெளியானது.
இதற்கு கபில்சிபில், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காட்டமாக பதிலளித்திருந்தனர். இதனால் இன்று காங்கிரஸ் கட்சிக்குள் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் ராகுல்காந்தியும் கபில்சிபலுக்குத் தொடர்பு கொண்டு, தாம் அப்படியே பேசவே இல்லை என்றும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்றும் கூறினார். இதையடுத்து, கபில் சிபல் தனது ட்விட்டை நீக்கினார். தன்னிடம் ராகுல்காந்தியே விளக்கம் கொடுத்ததையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்தான் சுமார் 7 மணிநேரமாக நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் மேலும் 6 மாதத்துக்கு சோனியா காந்தியே காங்கிரஸின் இடைக்கால தலைவராக தொடர்வார் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த 6 மாதத்துக்குள் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.