கடலில் அலைகள் ஓயாது.. காங்கிரசில் சலசலப்பு ஓயாது.. ப.சிதம்பரம் பேட்டி

Those who wrote letter as fiercely opposed to BJP as Rahul Gandhi or me: Chidambaram.

by எஸ். எம். கணபதி, Aug 25, 2020, 10:12 AM IST

கடல் என்றால் அலைகள் சத்தம் போடத்தான் செய்யும். அப்படித்தான் உயிரோட்டமுள்ள காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு வரத்தான் செய்யும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி உள்பட 23 பேர் சேர்ந்து, சமீபத்தில் கட்சித் தலைமைக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், இடைக்காலத் தலைவர் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம், நேற்று (ஆக.24) காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில் தாம் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும், உடனடியாக புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான பணிகளைத் தொடங்குமாறும் சோனியா கூறினார். ஆனால், மன்மோகன்சிங், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் சோனியாவே தலைவராக நீடிக்க வேண்டுமென்றனர்.

அப்போது, குலாம் நபி ஆசாத், கபில்சிபல் ஆகியோரை ராகுல்காந்தி விமர்சித்ததாகவும், பாஜகவுடன் அவர்கள் ரகசியமாக உடன்பாடு வைத்துக் கொண்டு காங்கிரசை பலவீனப்படுத்துகிறார்களா? என்று கேள்வி எழுப்பியதாகவும் செய்தி வெளியானது.
கூட்டத்தில் பங்கேற்காத கபில்சிபல், இந்த செய்தியைப் படித்ததும் கோபமடைந்தார். உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவை ஆதரித்து நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று காரசாரமாகப் பதிவு வெளியிட்டார். உடனே, அவரை ராகுல்காந்தி தொடர்பு கொண்டு தாம் அப்படிப் பேசவே இல்லை என்றும் மீடியாவின் தவறான செய்திக்கு ஆட்படுகிறீர்கள் என்றும் விளக்கம் தெரிவித்தார். இதையடுத்து, கபில் சிபல் தனது ட்விட்டை நீக்கினார். தன்னிடம் ராகுல்காந்தியே விளக்கம் கொடுத்ததையும் குறிப்பிட்டார். அதன்பின், சோனியாவே இடைக்கால தலைவராக 6 மாதங்கள் நீடிப்பது எனக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தொலைக்காட்சி சேனல்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தலைமைக்குக் கடிதம் எழுதியவர்கள் அனைவருமே என்னை விட, ராகுல்காந்தியை விட மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்தவர்கள் என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் கட்சி உயிரோட்டமான கட்சி என்பதால், கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். எதிர்க்கருத்துகள் வந்தால்தான், இன்னும் வேகமாகச் செயல்படுவதற்கு உதவும். கட்சியில் எல்லாமே சரியாக இருப்பதாக நான் சொல்லவில்லை. கடலில் என்றாவது அலைகள் ஓய்ந்துள்ளதா? அலைகள் அமைதியாகிப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி அலைகள் ஓய்ந்து விட்டால், அது இறந்தக் கடல் (Dead sea) ஆகி விடும். கட்சியில் சில கேள்விகள் எழத்தான் செய்யும். அப்படி எழும் போது அதற்கான தீர்வுகளை நாம் காண்கிறோம். காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு சிதம்பரம் கூறினார்.

You'r reading கடலில் அலைகள் ஓயாது.. காங்கிரசில் சலசலப்பு ஓயாது.. ப.சிதம்பரம் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை