அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவதற்கே உட்கட்சித் தேர்தல் நடைபெறும். அதில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெறுபவரே வேட்பாளராக நிற்க முடியும். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பிடன் அக்கட்சிக்குள் போட்டியிட்டு, கடந்த ஜூன் மாதம் வரை நடந்த வாக்குப்பதிவுகளில் 3900 வாக்குகளைப் பெற்று விட்டார். பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று விட்டதால் அவரே வேட்பாளர் என்பது உறுதியானது.
ஆனாலும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில்தான் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும். தற்போது அமெரிக்காவில் கொரோனா பரவியுள்ளதால், 50 மாகாணங்கள், 7 யூனியன் பிரதேசங்களிலும் ஆன்லைன் மூலம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடந்த வாரம் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. அதில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜோ பிடன் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை அதிபர் வேட்பாளராகக் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ஆளும் குடியரசு கட்சியிலும் அதிபர் வேட்பாளர், துணை அதிபர் வேட்பாளர் தேர்வு முடிந்தது. குடியரசு கட்சியின் தேசியக் குழு தலைவியான ரொன்னா மெக்.டேனியல், நேற்று(ஆக.24), வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் தேர்தலில் மைக் பென்ஸ் ஆகியோரை இம்முறையும் போட்டியிடுகிறார்கள் என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
கொரோனா பரவல் காரணமாகத் தேசியக் குழுக் கூட்டம், பெரிய அளவில் நடத்தப்படவில்லை. எனினும், குழு அரங்கத்திற்கு வந்த டிரம்ப், நாம் இது வரை யாருமே செய்திராத பணிகளை விரைவாகச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நமது ஒற்றுமைதான் நமக்கான வெற்றியாகும். இந்த வைரஸ் நோய் பரவலையும், அதன் தாக்கத்தையும் நாம் மறக்க முடியாது. நமது சேவைகளை வேகப்படுத்துவோம் என்றார்.
மைக் பென்ஸ் பேசுகையில், அமெரிக்காவின் நலனுக்காக இன்னும் 4 ஆண்டுகளுக்கு அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட வேண்டும். அதை நாம் உறுதி செய்வோம் என்று குறிப்பிட்டார்.