கேரள மது எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் கதீஜா நர்கீஸ், பத்மினி மற்றும் கிரேஸ். இவர்கள் 3 பேரும் சேர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் கூறியிருப்பது: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது பயன்பாட்டைக் குறைப்போம் என்றும், மதுக்கடைகள் மற்றும் மது பார்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றும் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக ஆட்சிக்கு வந்தவுடன் பார்களின் எண்ணிக்கையை 20 மடங்கு அதிகரித்து விட்டனர்.
இது சமூகத்திற்கு மிகவும் ஆபத்தாக அமைந்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார், நீதிபதிகள் ஷாஜி மற்றும் சாலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மதுக்கடைகளை அதிகரிப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல.
ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்குத் தேவையான கொள்கைகளை அந்தந்த மாநில அரசுகள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசின் கொள்கைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கோ அல்லது பொது மக்களின் விருப்பத்திற்கு எதிராகவோ இருந்தால் மட்டுமே நீதிமன்றம் அதில் தலையிட முடியும். கொள்கைகளை மாற்றவும், புதுப்பிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. அதில் நீதிமன்றங்களால் தலையிட முடியாது என்று கூறி அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.