தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில், பா.ஜ.க.,வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, அ.தி.மு.க. அரசு பரிதாபமாகப் படுதோல்வி அடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை, சுயநல நோக்கில், நாடாளுமன்றத்தில் ஆதரித்தபோதும்கூட, அ.தி.மு.க. அரசு நீட் சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து ஒப்புதல் பெறுவதில் கோட்டை விட்டுவிட்டு, தமிழக மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து விட்டது.
சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்தச் சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும். டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று இனியும் மவுனம் சாதிக்கக்கூடாது. கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாடு அரசோ, முதலமைச்சரோ இந்தத் தலையாய பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதிலிருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்குத் தெரிந்துவிட்டது.
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முனைப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளனர். புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி, அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான அனுமதி தொடங்கும் என்று சொல்லி, பிரச்சினையைத் திசை திருப்ப முதல்வர் பழனிசாமி எடுக்கும் முயற்சி, தமிழக மாணவ - மாணவியரிடம் நிச்சயம் பலிக்காது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச்செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.