பிரசாந்த் பூஷன் மீதான 2009 அவமதிப்பு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்..

New SC bench to hear 2009 contempt case against Prashant Bhushan.

by எஸ். எம். கணபதி, Aug 25, 2020, 14:19 PM IST

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு, வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.டெல்லியில் சமூக ஆர்வலரும், பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன் மீது 2 அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் கடந்த ஜூன் 27ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தாத நிலையிலும் ஜனநாயகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதையும், அதில் நீதிமன்றங்களும் எப்படி பங்கு பெற்றன என்பதையும், குறிப்பாகக் கடைசியாகப் பதவி வகித்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கு என்ன என்பதைப் பற்றியும் பிற்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்று கூறியிருந்தார்.

அதே போல், ஜூலை 29ம் தேதி போட்ட ட்விட்டில், ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு மக்கள் நீதி பெற முடியாமல் தவிக்கும் நேரத்தில், பாஜக பிரமுகர் ஒருவரின் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக்கில் தலைமை நீதிபதி பாப்டே, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.இந்த 2 பதிவுகளுக்காக பிரசாந்த் பூஷன் மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து அவருக்குக் கடந்த ஜூலை 22ம் தேதியன்று சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் அருண்மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அவமதிப்பு வழக்கில் பூஷனுக்காக பிரபல வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த 14ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கான தண்டனை குறித்து முடிவெடுக்கப்படாமல் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரசாந்த் பூஷன் மீது இன்னொரு அவமதிப்பு வழக்கு, இதே நீதிபதி அருண்மிஸ்ரா அமர்வில் நிலுவையில் உள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் தெகல்கா பத்திரிகைக்கு பிரசாந்த் பூஷன் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தலைமை நீதிபதிகளின் ஊழல்கள் குறித்துக் குற்றம்சாட்டியிருந்தார். இதை அப்போது வக்கீல் ஹரீஷ் சால்வே, சுப்ரீம் கோர்ட் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதனடிப்படையில், பிரசாந்த் பூஷன் மீது அந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த 2வது அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று(ஆக.25) அதே நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாந்த் பூஷன் தரப்பில், இந்த வழக்கில் பல சட்ட நுணுக்கங்கள் அலசி ஆராய வேண்டியுள்ளதால், இதை அரசியலமைப்பு சட்ட அமர்வு விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டுமெனக் கோரப்பட்டது. அதை ஏற்காத நீதிபதி அருண் மிஸ்ரா, நான் செப்.2ம் தேதி ஓய்வு பெறவிருக்கிறேன். எனவே, இந்த வழக்கை விசாரிப்பதற்கு போதிய கால அவகாசம் இல்லை. இதை வேறொரு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைத்து விசாரணையை செப்.10ம் தேதிக்குத் தள்ளி வைக்கிறேன். என்று தெரிவித்தார்.

You'r reading பிரசாந்த் பூஷன் மீதான 2009 அவமதிப்பு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை