குஜராத்தில் வைரக் கற்கள் தீட்டுதல் மற்றும் ஏற்றுமதி தொழில், கொரோனாவால் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்றுமதி 300 கோடி டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது.
குஜராத் மாநிலம், சூரத் மாநகரத்தில் வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் அமோகமாக நடைபெறும். மிகப் பெரிய வர்த்தக நகரமான இங்கு தற்போது கொரோனாவால் இரண்டு தொழில்களுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜவுளித் தொழிலில் ஈடுபட்டிருந்த ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். அதே போல், பிற மாநிலங்களில் கொள்முதல் குறைந்ததால், ஜவுளி கொண்டு செல்வதும் குறைந்து விட்டது. இதே போல், வைரக் கற்கள் தீட்டும் தொழிலும், வைரம் ஏற்றுமதி தொழிலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. இந்த தொழில்களில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வந்தனர். கொரோனாவால் இந்த தொழில்கள் நலிவடைந்துள்ளன. குஜராத் மண்டல ஜெம்ஸ் அண்ட் ஜுவல்லரி கவுன்சில் சேர்மன் தினேஷ் நவாடியா கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வைர ஏற்றுமதி 300 கோடி அமெரிக்க டாலர் அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால், இந்த தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது என்றார்.கடந்த ஜூலை மாதத்தில் மட்டுமே 18.11 சதவீத ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக, சீனாவுக்கான வைர ஏற்றுமதி மட்டும் 15 முதல் 20 சதவீதம் குறைந்துள்ளது. அதே போல், கொரோனா பாதிப்பால், மேற்கு ஆசிய நாடுகளிலும் வைரத்தின் தேவை மிகவும் குறைந்து விட்டது என்று வைர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.