தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விலக்கப்படுமா.. ஆக.29ம் தேதி தெரியும்..

will Lockdown extend after septemper 1 in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Aug 26, 2020, 09:16 AM IST

தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் மாதத்திலும் நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்பது குறித்து வரும் 29ம் தேதி தமிழக அரசு அறிவிக்க உள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், அடுத்தடுத்து தளர்வுகள் செய்யப்பட்டன. எனினும், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் திறக்கப்படவில்லை. பஸ், ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதற்கு இ-பாஸ் பெறும் நடைமுறையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்தன. ஆனாலும், அதைத் தமிழக அரசு விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கே எந்த அனுமதிச் சீட்டும் தேவையில்லை என அறிவித்து விட்டது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் அதை அமல்படுத்தாததால், மத்திய உள்துறை செயலாளர் அஜய்பல்லா, கடந்த வாரம் அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, இ-பாஸ் ரத்து செய்யப்பட்டால் மக்களின் நடமாட்டம் அதிகமாகி, தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசு கருதுகிறது. அதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் ஏற்கனவே ஆலோசனைகள் வழங்கியுள்ளார்.மேலும், இதுபற்றி ஆலோசிக்க வருகிற 29ம் தேதி காலையில் காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்டக் கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர்ந்து, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடக்கும் இந்த 2 கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுமா? கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுமா? இ-பாஸ் ரத்தாகுமா போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விலக்கப்படுமா.. ஆக.29ம் தேதி தெரியும்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை