மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடி பகுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்தனர். இரவில் நிலச்சரிவு நடந்த போதிலும் மறுநாள் காலையில் தான் இந்த பயங்கர சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை, போலீசார், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையின் பலனாக 65 உடல்கள் மீட்கப்பட்டன. காணாமல் போன 5 பேரின் உடல்களைத் தேடும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வந்தது. ஆனால் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடந்த தேடுதல் வேட்டையில் எந்த உடல்களும் கிடைக்கவில்லை. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் கனமழை பெய்து வந்ததால் உடல்களைத் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து மீட்புப் பணியைத் தொடரலாமா வேண்டாமா என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 23ம் தேதி மூணாறில் நடந்தது. கூட்டத்தில் 2 நாள் இடைவெளிக்குப் பின் 25ம் தேதி முதல் மீட்புப் பணியை மீண்டும் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி நேற்று நடந்த தேடுதல் வேட்டையிலும் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. காணாமல் போன 5 பேரின் உறவினர்கள் கூறிய இடங்களில் அனைத்தும் நேற்று தேடும் பணி நடந்தது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதையடுத்து தற்காலிகமாக மீட்புப் பணியை நிறுத்த இன்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தேசிய பேரிடர் மீட்பு படை உள்பட அனைவரும் அங்கிருந்து திரும்பிச்செல்லத் தீர்மானித்துள்ளனர். காலநிலை சீரான பிறகு உள்ளூர் மக்களின் உதவியுடன் மீண்டும் தேடும் பணி தொடங்கும் என்று இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன் தெரிவித்துள்ளார்.